Road trip -


சாலைப் பயணம், காலையில் ! 
காலைப்பயணமே ஒரு தனி அனுபவம் தான்! இந்த காலை பயணங்களில்   அதுவும் சாலை வழிப் பயணங்களில் நான் கை தேர்ந்த அனுபவசாலின்னு  நிச்சயமா சொல்லிக்கலாம் !
பள்ளிபருவத்திலிருந்தே மதுரையிலிருந்து திருச்சிக்கு எல்லா விடுமுறையிலும் போவேன். அந்த அனுபவம் ஒரு தனி  சுகம் !நாளையிலிருந்து  - ஆஹா நாளையிலிருந்து லீவு தவிர அப்பா அம்மாவைப் பாக்கப்போறோம்ங்கற ஆவல், இதோடு கூட தனிமையில் பயணம் ! பெரிய பெரிய புளிய மரங்கள், தூரத்தில் மா, இன்னும் பின்னால் நெட்டையனாக தென்னையும், பனையும்! அதோ! கூடவே வரும் ஊதா   மலைத்தொடர். ரோடின் ரெண்டு பக்கமும் வரிசையாக வரும் கிராமங்கள்,  சிற்றூர்கள், கொத்துகொத்தாய் மனிதர்கள், கூரைக்கடைகள் என வழி முழுதும் இந்த  மண்ணின்  வாழ்க்கைக் காட்சிகள் -  அலுக்கவே அலுக்காத மூணு மணி நேரம் . சில நேரங்களில் செடி கொடிகளுக்கு நடுவில் பாம்பு போல் வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, அதனில் 'கடக்  மடக்' என உருளும் ஒற்றை மாட்டு  வண்டி  -  முடிவில்லாமல் நீளும் அந்த பாதையில் நான் அந்த வண்டியில் இருந்தால்.... ' இப்படி கற்பனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
நான் தனியாகப் போனதும் உண்டு, கூடத் தம்பியும் வந்ததுண்டு. இயல்பான மௌனங்கள், ஒரு பார்வையில்  அடுத்தவர் மனதைப் படிக்கும் அந்த நெருக்கம் -அவனோட அந்த நமட்டு சிரிப்பும், குறும்புப் பார்வையும் இன்னும் அப்படியே கண் முன் நிற்கிறது. (ஆனால் அவன் தான் இல்லை!)
இப்ப சென்னை - திருவண்ணாமலை பாதை மதுரை - திருச்சி ரோடு வழி மாதிரியே ஆயிடுத்து. மாசம் ஒரு முறையாவது திரு -சென்னை , சென்னை -  திரு பாதையில் பயணிக்கிறேன்.
காலை பயணம் - அதே மகிழ்ச்சி! 'தகதகன்னு செம்பிழம்பாய் அதோ   சூரியன் ! மெல்ல மெல்ல புகை மூட்டம் போல தெரிந்த மரம், மட்டை, வயல், வீடு எல்லாம் அழுத்தமான கோட்டுச் சித்திரங்களாய் புலப்படத்  தொடங்கும் மாயாஜாலம்! அதே போல் மரங்கள் முன்னால்  இல்லை, ஆனால் பின்னால் உயர்ந்த தென்னையும், பனையும் மெல்லக் காற்றில் ஆடும் அழகு! பச்சைப் பசேர்னு  கதி ிர் கள் ஆடும் வயல்கள் உண்டு. ஆனால் எல்லாம் ஸ்டேட் ஹை வே , சின்ன நகர்ப்புற ரோடோடு சரி !
6 வழிச்சாலையோ, 4 வழிச்சாலையோ கார்களும், டிரக்'களும்  ஜும் ஜும் னு பறக்க வசதி, ஆனால் சுற்றி வாழும் மக்களின் உயிரோட்டமான தினசரி ஓட்டங்களைக்  காட்டுவதில்லை.
கார் ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கி எதிர் காற்று முகத்தில் மோத சூரியன் இதமான சூட்டுடன் தன் கதிர்களால் மண்ணின் எல்லா உயிர்களையும் எழுப்பும் காட்சி பார்க்க அலுக்கவே அலுக்காது! பெண்ணாத்தூர், மேல்பாப்பம்பாடி, செஞ்சி, ஆலம்பூண்டி , குரங்குகள் தாவி ஓடும் வனத்துறை காடு என்று தாண்டும் வரை பாரதியின்," புதிய காலை உதயமானதே" என்று பாடலாம்.  
ம் .... அப்புறம் ? கண்ணை மூடி குட்டித் தூக்கம் போடலாம்!





கருத்துகள் இல்லை:

Do you have any questions?

  प्रश्नः,  प्रश्न , 'கேள்வி ,  ചോദ്യം (chodyam), 'Prashna' - ప్రశ్న, প্রশ্ন, प्रश्नः,  प्रश्न , ಪ್ರಶ್ನೆ( Praśne ), પ્રશ્ન, سوا...