நானும் தான் திரும்பிப் பார்க்கிறேன் நடந்து நந்த பாதையை ! சித்ராவின் இந்த அறுபது வருட வாழ்க்கைக் கதையின் இன்னொரு நாயகி, தோழி என்பதின் மறு உருவமான சுதா - இது வெறும் வார்த்தையில்லை! அவளது நினைவுகள் ஒரு சலசலத்தோடும் ஓடை போல கவிதையாய் என்னுடன் பகிர்ந்ததை இங்கு கொடுத்திருக்கிறேன்.
திரும்பிப்பார்க்கிறேன் ...
அறுபது வயதினிலே ஒரு இதிஹாஸம் ....
பால் குடிக்கும் வயது வரை அன்னை மடியில் - அதற்கப்
பாலோ அடுத்த வீட்டில் தான் அவர் கண்டார் நம்மை
முன்னே பிறந்து காத்திருந்தாள் மாசிச் சுவாதியில்
மூன்றே மாதம்தான்,பின் பிரிந்ததென்னவோ உடல்தான் மனம் இல்லை!
இணைந்து தினம் மாலை விளையாட்டு- விடுப்பு என்றால்
இப்போது அப்போது என்றில்லை எப்போதும் தான்
காலையில் கதைக்க கோயிலுக்கென அரை மணி
மதியம் பாண்டி, பல்லாங்குழி, மாலை ஷாகா,இரவு நாடகம், நாட்டியம் கூடும்நண்பர்க்குபஞ்சமில்லை,ஆட்டங்களிலும் அசந்ததில்லை; தேரும் திருவிழாவும் கோடையில் தண்ணீர் வார்த்தது நம் நட்பிற்கு .
இருந்தும் நடுநடுவே 'கா ' வும் 'டூ ' வும் பல பல .
உன் கட்சியில்யார்என் கட்சியில் யார் என அரசியலில் நாட்கள் சில இருந்தும் நடுநடுவே 'கா ' வும் 'டூ ' வும் பல பல .
உன் கட்சியில்யார் என் கட்சியில் யார் என அரசியலில் நாட்கள் சில
இயல்பும் இசைவும் புரிய, பின் அகழ்ந்தாழ்ந்தது நெருக்கம் !
இவரிருவரும் எங்கே என்போர்க்கு இரு வீடு ஒரு வாசலாய் ஆனது .
வாசலால் சென்ற வழித்தடமும் பள்ளமாய் போனதோ!
மாடிச் சுவரேறி ரகசியமாய் கலப்பதிலும் ஒரு ஆனந்தம் தான்!
சுரங்க வழிப்பாதைதான் வசதி என அத்திட்டமும் கைவசம் கற்பனையில் உண்டு!
இழையோடும் போட்டி எப்போதும் - வியக்கின்றேன் இன்று
பொல்லாதபொறாமை உணர்வில்லை-இருவரும் பெற்றோம் சில பல திறமைகள்!
கோலம், அதில் இரண்டிழை, இட்லி மாவரை, பூகட்டு,
இன்னிசை, நுண்கலை, பன்மொழி என பொய்யும் மெய்யுமாய்
நீ கற்றால் நான், நான் செய்தால் நீ என,
மார்கழி விடியலில் யார் முதல் கோலம் எனும் பனிப்போரில்
மத்தியில் நசிந்தாள் தினம் வாசல் தெளிக்கும் மாரியம்மா!
பள்ளியும் படிப்பும் வேறு, பழக்கமும் வழக்கமும் வேறு
இவ்வேற்றுமை பரிமாற்றத்திற்கு ஊட்டம் தந்ததோ?
இணக்கமான மனமும், ஒன்றான கண்ணோட்டமும்
அண்டை வீட்டுக்கான பெரியோர் பண்பில் அன்பில்
நீரூற்றி வளர்ந்து வேரூன்றிச் சிறந்தது தொட்டில் பழக்கம்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் நண்பர் வட்டம் சுருங்க
நாமிருவர், நம் ஒருவருக்கே ஒருவர் ஆனோம்.
பருவங்கள் மாறின, வயது வளர, தெருவும் சுருங்கியது ஆனாலும்
தினம் சந்திக்காமல் அயர்ந்ததில்லை, அரங்கம் தான் மாறியது !
கருணாநிதியோ, காமராஜரோ, சிவாஜியோ, எம்ஜிஆரோ,
ஜொள்ளு விடும் அடுத்த கடைப் பையன், எதிர் வீட்டு மைனர்
தோழியிடம் தூது விடும் சொந்தங்கள்
மேகத்தின் வரைபடங்கள், வானத்து நட்சத்திரங்கள்
சேர்ந்து ரசித்தவை, சேராதிருக்கையில் விடுபட்டவை
கவிதைகள், கதைகள் , சரித்திரங்கள், அரசியல் என
சாண்டில்யனையும் வகிர்ந்தோம், அநுத்தமாவுடன் அழுதோம்
சாத்திரங்களின் சத்தியத்தை தேட முனைந்தோம்
நம் அந்தரங்க மாநாட்டில் யாரை விட்டோம், எதை விடுத்தோம் !
அறைக்குள் இரு மணி, "அய்யோ நேரமாச்சு" என
நிலைப்படியில், வாசலில் இன்னும் ஒரு மணி ...
"சித்ரா, பாட்டி கூப்பிடறா" எனும் பாலு மாமாவின் மூன்றாவது தவணைக்கும்
சளைக்காத,அள்ள அள்ளக் குறையாத ஊற்றாய் அலசல்கள்!
வற்றாத நதியாய் தொடரும் தலைப்புகள்!
அறிந்தும் அறியாப் பருவத்தின் வடிகாலாய் இவை
அழகாய்ச் செதுக்கி சீராக்கியது நாளை வாழ்வுக்கு நம்மை
அடுத்து வந்த திருமணம் நான் எங்கோ, நீ எங்கோ என இழுக்க
(இன்று போல் அன்றும் கைபேசி இருந்திருந்தால்
இளமையின் இடிகளில் துணையாய் இணைத்திருக்கும்!)
கண்ட போதெல்லாம் தொடர்ந்தோம், இடையறாத கணங்களின் தொடர்ச்சியாய்
பக்கத்தில் வந்ததுமே ஓடி ஒட்டும் இரும்பும் காந்தமும் போல
இன்று ஒரு யுகத்து நட்பாய், தனித்துவமாய் ஒரு நெருக்கம்
கண்ணில் நீர் முட்டினால் சாயத் தோளிருக்கு எனும் தைரியமாய்.
பிறக்கையில் நூறு நாள் இழந்தோம் - அஸ்தமனத்தை நோக்கி
பறக்கையில் கை கோர்த்து இன்று - அக்
குறையுமின்றி காவியம் படைப்போமோ ?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என சரித்திரம் சமைப்போமோ ?
"கண்டத்தில் கொண்டலாய் நின்ற கருத்துக்களை
'கூடும் மேகங்கள் பொழியா தமிழ் நாட்டு வானமாய்' தேக்கி வைத்திருந்தேன்.
நிச்சலனமான நடுநிசியும் நல் குளிர் காற்றும் உழுது கொடுக்க
வெள்ளை நிறத்தில் முளைத்த நீல முத்துக்களாய் பூத்தன இன்று!
நேரமோ திருமலையின் பள்ளி எழுச்சியை நெருங்க
நெஞ்சமோ காலச்சுவடுகளை திருப்பும் சுகத்தில் திளைக்க
வயதின் சுமையை சுவையாக்குவதும் இதுதானோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக